Tuesday, April 1, 2008

உசுரு...

தேதி நினைவில்லாத ஒரு அக்டோபர் '99 தினம்...கேரளாவில், செங்கண்ணூரில், தங்கியிருந்த அறைக்கு வெளியே வானம் பார்த்தபடி சரவணனும் நானும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்.. பம்பாய் படத்தின் உயிரே பாடலைப் பற்றி உரையாடல் திரும்புகிறது.. "இந்த படத்தை பாரதிராஜா எடுத்திருந்தா எப்படி இருக்கும்?!" என்று சுவையான ஒரு சிந்தனை தோன்றுகிறது.. பம்பாயின் பல்வேறு (முதல் பாதி) காட்சிகளுக்கு ஒரு "பாரதிராஜாத்தனத்தை" கொடுத்து பார்க்கிறோம்.. சிரிப்பும், சுவையுமாக மாறுகின்றன மணிரத்ன காட்சிகள்.. (அரவிந்த் சாமி வீட்டில் ஒரு தண்டட்டி கிழவி கண்டிப்பாக வெற்றிலை குதைத்துக் கொண்டிருந்திருக்கும்! பர்தாவைக் கழற்றி பட்டாம்பூச்சி பிடித்திருப்பாள் சாயிரா பானு! ஒரு காட்சியிலாவது அரவிந்த் சாமியின் பதிலடிகள் கற்பனையில் நாசரின் கன்னத்தில் அறைந்திருக்கும்!)
சரவணன் கிளம்பிப் போன பின்னும் அந்த உயிரே பாடல் பற்றி தோன்றிக் கொண்டே இருக்கிறது.. அப்பொழுது எழுதியது, இப்பொழுது பூக்கிறது...


"உசுரு..."


அவன்...


நடந்து நடந்து களைச்சுப் போச்சு
நெலவும் கூட ஒறங்கிப் போச்சு
பாவிமக நெனப்பினிலே
நெஞ்சு மட்டும் ஒறங்கலையே

இருட்டுப் போர்வை போத்திக்கிட்டு
இந்த லோகமெல்லாம் கண்ணசர
தரைமீனா நா மட்டும்
துடிக்கிறது தெரியாதா

கம்மாக்கரை சந்திப்பெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதடி - என்
கைப்புடிச்சி நீ செஞ்ச சத்தியம்
இப்பக்கூட வலிக்குதடி

மல்லாந்து நா கெடக்க
விண்மீனும் சிரிக்குதடி
என் மீசையத்தான் மழிக்கச் சொல்லி
வீண்வம்பு பேசுதடி

ஊரெல்லாம் எதுத்தாலும்
ராசாத்தி கைப்புடிப்பேன்-உன்
ஒரு பார்வை கூட வந்தா
கோட்டயெல்லாம் நா ஜெயிப்பேன்

சாமக்கோழி கூவையிலே
பொழுது ரென்டும் கூடையிலே
வந்திருவேன்னு சொன்ன மயில்
வாசம் கூட வரவில்லையே...

புளியமிலாறு கையெடுத்து
அப்பன்காரன் அடிச்சானோ
அரளிவெதை அரைப்பேன்னு
ஆத்தாக்காரி அழுதாளோ

ஆரு ரூவா முழமுன்னு
வாங்கி வச்ச மல்லிபூவு
வாடுறத பாக்கையிலே
வாழ மனம் புடிக்கலையே

கண்ணுமணி திங்கத்தான்
கொண்டுவந்த கைமுறுக்க
கட்டெறும்பு மொச்சுவிட
காள உயிர் தெறிக்குதிங்கே

நாலுதெச வழியிருக்க
ரெண்டு மட்டும் விழியிருக்க
எந்த பக்கம் வருவாயோ
என் ஆச பைங்கிளியே

வேர்த்து வேர்த்து ஒடம்பெல்லாம்
தெப்பம்போல ஆகிடிச்சு - என்
உள்வெப்பம் தாளாம
மேகம்கூட ஓடிடுச்சு

நெலமெல்லாம் எழுதிவப்பேன்
என் காதல் பொலம்பி வப்பேன்
நீ வந்து பாக்கையிலே
வானமேறிப் போயிருப்பேன்

பொட்டு வச்ச பூ வந்தா
புது சென்மம் எனக்கு வரும்
வட்ட நெலா வரலேன்னா
சட்டுன்னு உசிர் போகும்.


அவள்....



ஒத்தக்கல்லு மூக்குத்தி
அணிஞ்ச இந்த ராசாத்தி
அல்லல்பட்ட கத இதத்தான்
அத்தானே கேளுமய்யா

பொழுது சாஞ்சிப் போச்சின்னு
நெலா வந்து சொன்னுச்சா
சீவிமுடிச்சு சிங்காரிக்க
சிறுக்கி நானும் போனேங்க...

அலங்காரம் முடிச்சுப்புட்டு
அல்லிராணி மொகம் பாக்க
கண்ணாடியில் நின்னப்ப
ஏதோவொண்ணு கொறஞ்சதய்யா

ஓரக்கண்ணால் பாத்தப்ப
ஒரு கொறையும் தோணாம
உத்து உத்துப் பாத்தப்ப தான்
எங் கொறைய தெரிஞ்சிக்கிட்டேன்

பொட்டில்லா நெத்தியிலே
பட்பட்னு அடிச்சிக்கிட்டேன்
என் நெழலும் கூட கேக்காமலே
எனக்குள்ளே சிரிச்சிக்கிட்டேன்

பொட்டுவைக்க மறந்திட்டுதான்
நா வந்து நின்ன நாள் முழுக்க
நீ பேசாம எனைக் கொன்ன
அந்த புதன்கிழமைய மறப்பேனா?

குங்குமத்த வைக்காமுன்னு
சிமிழத்தான் நான் தொறந்தா
என் பிம்பம் எனைப்பாத்து
ஏளனமா சிரிச்சதயா

வெறுஞ்சிமிழ வச்சிகிட்டு
வேறென்ன செய்யிறதாம்
வழியேதும் இருக்கான்னு
ரோசனையா நானிருந்தேன்

எதுத்த வீடு அடுத்த வீடு
கேக்க எனக்கு நா கூசும்
எரவல் விசயம் தெரிஞ்சதுன்னா
என் ஆத்தா கை பேசும்

கஸ்தூரி மஞ்சளில்ல
கைப்பகுவமும் எனக்கு யில்ல
எப்படித்தான் குங்குமத்த
இன்னிக்குள்ள நானிடிப்பேன்?

காட்டாத்துக் கரையினிலே
காத்து காத்து நீயிருப்பே - ஒன்
கண்மணிய காணாமத்தான்
நீறுபூத்துப் போயிருப்பே

கவிதயெலாம் எழுதிவந்து
காதுக்குள்ள படிப்பீக
புரியாட்டிப் போனாலும்
அந்த ஒதட்டசைவ பாத்திருப்பேன்...

இப்படி கனவு மேல கனவு வச்சு
மாலையொண்ணு தச்சு வச்சேன்
எல்லாமே கலைஞ்சுப் போச்சு
கண்ணீரே மிச்சமய்யா

உசிரத்தான் விடுவென்னு
ஒன் பொலம்பல் கேட்டதய்யா
ராசாவே நானிருக்க - ஒன்
கண்கலங்க கூடாதய்யா

கண்ணாளா ஒன் உசிர
என் உசிருக்குள் முடிஞ்சிருக்கேன்
பாறைக்குள் நீராக
பொத்திப் பொத்தி வச்சிருக்கேன்

உசிர் போகும் வேள வந்தா
என்னுசுர நா குடுப்பேன்
ரெண்டுசுரு நாம் வாழ
ஒத்த உசுரு போதுமய்யா..!

Thursday, March 20, 2008

ஜோதா அக்பர்.. உடையாத விற்களும் தேயாத நிலாக்களும்!

பயணம் செய்வதற்கென்றே


வேண்டும் சில பயணங்கள்,


போகும் இடம் பற்றிய கவலைகளின்றி ...


----------------------------------------------------------------



94-இல் வைரமுத்து எழுதிய புதினம், "வில்லோடு வா நிலவே". சேரன் செங்குட்டுவன் காலத்தில் நிகழ்வதாய் புனையப்பட்டது, இது.


செங்குட்டுவனின் சித்தி (தந்தை நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி) மகனான சேரலாதன் தொண்டியைத் தலை நகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த பொழுது நிகழ்ந்தது தான் "வில்லோடு வா நிலவே".



"சேரன் வஞ்சி" என்ற தலைப்பில் எஸ். கே. அய்யங்கார் எழுதிய வரலாற்று ஆய்வு நூலில் "காக்கைப்பாடினியார் நச்செள்ளை என்ற பெண் கவிஞரை காதல் மணம் புரிந்து பட்டத்து அரசியாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினான் சேரலாதன்" என்று குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் தென்படும் இந்த சுவாரசிய முரண் தான் விதையாக விழுந்து, அதிலிருந்து வில் முளைத்தெழுந்திருக்கிறது.



வருணபேதம் (மனுஸ்ம்ரிதிப்படி, சமூகம் நான்கு வகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டும். ஆரியர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மற்றும் சூத்ரர்களாக ஒவ்வொரு பிரிவினரும் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன எனப் பட்டியலிடுவதே "வருண பேதம்"!) ஆட்சி நெறியாக கோலோச்சிய காலத்தில் 'கொல்லன்குடி பெண்ணொருத்தி சேர அரசின் கொலுமண்டபமேறினாள்' என்பது என் நரம்புகளில் தீ மூட்டியது" என இந்த முரணை சிலாகிக்கிறது, வைரமுத்துவின் முன்னுரை.



சுவாரசியம் ஒன்று - நச்செள்ளை என்கிற புலவரை சேரலாதன் என்ற புரவலன் மணந்தது.



சுவாரசியம் இரண்டு - கொல்லன்மகளான அவள், சேர செங்கோலின் ஒரு பகுதியாய் ஆனது.



இப்படி "ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வருணாசிரமத்தை எதிர்த்த இளைய சேரனின் கதை"யை இன்று கற்பனை கலந்து படைப்பதன் நோக்கம் என்ன?



அந்த காலக்கட்டத்தில், சமூகத்தில் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை எதிர்த்து ஒரு புரட்சி செய்யப்பட்டிருக்கிறது. அதைச் செய்தது ஒரு அரசன் என்கிற முடிச்சு, இன்று நமக்கு பரிமாறப்படுகின்ற பொழுது, அன்று வாழ்ந்தவர்கள் பற்றிய ஒரு பார்வை, ஒரு ஈடுபாடு உருவாகிறது இல்லையா, அதற்காகத்தான்.



"ஒவ்வொரு மனிதனும் கடந்த காலத்தின் தொடர்ச்சிதான். நாம் இன்று அணிகிற நாகரிக உடை என்பது, இலை தழை வடிவத்தின் தொடர்ச்சிதான்" என்பதை அறிய நேர்கையில், ஆடை மீதும் மரியாதை வருகிறது.



பெட்ரொலும், மின்சாரமும் இல்லாத காலத்தில் காதலுக்கும் வீரத்துக்கும் வாழ்க்கைப்பட்ட ஒரு பண்பாடு மெல்ல மீசை முறுக்குகிறது. "பழைய நாகரிகம் பயிலப் பயில, 'எப்படிப்பட்ட ஒரு இனத்தின் (பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீரிப் புதைப்போம்! - புற நானூறு) எச்சமாக இருக்கிறோம்" என்கிற சிலிர்ப்பு ஏற்படுவதாய் இரும்பூதுகிறது, வைரமுத்துவின் முன்னுரை.



தலைவன் தலைவியை சந்திக்கிறான் - காதலில் விழுகிறான் - எதிர்ப்பு - எதிர்ப்பை எதிர்த்து கரம் பிடிக்கிறான் - வில்லன்களின் சதி - காதலுக்காக ஆட்சியைத் துரக்கிறான்... என ஒரு வெகுமக்கள் திரைப்படத்திற்கான திரைக்கதை இலக்கணங்களோடு (!) எழுதப்பட்டதுதான் "வில்லோடு...".


என்றாலும், இதுவரை எந்த வரலாற்றுப் பாடப்புத்தகமும் செய்துவிடாத வேலையையும் சேர்த்தே செய்கிறது இந்த புதினம்.



ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூகச்சூழல், அதன் திரிபுகள், அதிகார மையங்கள், அரசியல் நிலை, பண்பாடு, வீரம், என தமிழ்வாழ்க்கை பற்றிய நெருங்கியதொரு பார்வைத்தளம் அமைக்கிறது, அத்தியாயம் அத்தியாயமாய்த் தாவச்செய்யும் மொழி நடையுடன்.



இது "வில்லோடு..." மட்டுமல்ல, பொன்னியின் செல்வன் (வந்தியத்தேவனை நேசிக்காதவர்கள் யார்?), கடல்புறா பரம்பரை புதினங்கள் பலவற்றுக்கும் பொருந்தும்.



மேலும், வைரமுத்துத் தமிழின் நீட்சியும், மொழியாளுமையும் "வில்லோடு..."வை வேறுபடுத்தி வேறொரு தளத்தினில் கொண்டு வைக்கின்றன.



" என்ன இது, மூடிய சிப்பிக்குள் மூடிய சிப்பிக்குள் முத்திருந்தால் வியப்பில்லை, ஒரு சிற்றரசே இருந்தால்..?" என சேரலாதன் நச்செள்ளையை வியப்பதும்...



" போதும், போதும், உங்கள் இருவரின் நாக்கும் நீங்கள் குடியிருக்கும் தெருக்களைவிட நீளமாக இருக்கும் போலிருக்கிறதே..!" என நச்செள்ளையின் தோழி குறும்போடு குறிப்பிடுவதும்...



" கடல் என்பது அலையடிக்கும் ஆகாயம். ஆகாயம் என்பது மேகங்கள் மிதக்கும் கடல்' என்ற கற்பனையும்...



" காதலிப்பவர்களுக்கெல்லாம் அறிவு வயப்படுகிறதோ இல்லையோ, மொழி வயப்பட்டு விடுகிறது!" என்ற நையாண்டியும்...



" எல்லா மீறல்களும் தவறல்ல.. மேகத்தை மழை மீறினால் பூமிக்கு நன்மை என்று பொருள்!" என்ற வாதமும்...



"மடலேறுதல் (ஒருதலைக் காதல் கொண்டவன் தன் காதலைப் பகிரங்கப்படுத்தி பனைக் குதிரையேறி தன் காதலைக் கவிதையாய்ப் பாடி வருவான். அப்படியும் காதலி இசையவில்லையெனில் அடுத்த நாள் மலையேறிக் குதித்து உயிர் துறப்பான்.) , ஆ நிரை கவர்தல் (ஓர் அரசன் மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்குமுன், தன் படை வீரர்களை அந் நாட்டுக்கு ரகசியமாய் அனுப்பி அங்கிருக்கும் பசுக்களை கவர்ந்து வரச் செய்வது - பசுக்களைக் கொல்வது போர் தர்மமல்ல), அரச விதிகள் (போருக்கு முன் இரவலர்களை அழைத்து மன்னன் தர்மம் செய்ய வேண்டும்), திருமண மரபுகள்( போரில் வெற்றி கொள்ளும் நாட்டின் பெண்களை - "கொண்டி மகளிரை" - சேர மன்னன் மணக்க மாட்டான்), அவ்வளவு ஏன்.. "பஞ்சணையிலும் போர்க்களத்திலும் உணர்ச்சி வசப்படலாகாது" எனக் கலவி ரகசியங்கள் வரை நம் பண்பாட்டுக் கூறுகளும், சுவையூட்டிகளும் விரவிக் கிடக்கின்றன, "வில்லோடு.." முழுவதும்.



சரி, ஜோதா அக்பருக்கும் "வில்லோடு.."வுக்கும் என்ன சம்பந்தம்?


எனக்கென்னவோ இவைதான் கோவாரிக்கரும் வைரமுத்துவும் சந்தித்துக் கொள்ளும் மையப்புள்ளியெனப் படுகிறது.



கொல்லன்குடி மங்கை சேர அரசியாகிறாள் தமிழ் புதினத்தில்.


ராஜபுத்திரி "மல்லிகா-ஏ-ஹிந்துஸ்தான்" ஆகிறாள் ஹிந்தித் திரையில்.


வைரமுத்துவின் நரம்புகளில் நாணேற்றிய அதே முரண் தான் கோவாரிக்கரையும் உந்தியிருக்க வேண்டும்.



முகலாயப் பேரரசின் மிகச்சிறந்த மாமன்னனாக பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் ஜலாலுதின் (அக்பர்) பல ராஜபுத்திரிகளை மணந்தார் என்பது இதற்குமுன் அனைவரும் படித்த பாடம் தான். ஆனால், அதன் பின்னால் இருந்திருக்கக் கூடிய அரசியல் சூழலை, அதனால் ஏற்படும் கலாச்சார நெகிழ்வுகளை (மன்னன் மனைவியை திரும்ப அழைக்க அவள் அம்மா வீட்டுக்கு வரும்பொழுது பெண்கள் கூட்டத்துக்கு நடுவே இருக்கும் அவளை அடையாளம் காண்பது போன்ற சின்ன சின்ன அழகியல் நிமிடங்கள்...), குடும்ப நீரோட்டங்களை ( ஷாஹென்ஷாவின் வளர்ப்பு அம்மாவும் " மாமியாராக" நடந்து கொள்வது..), முன்பும் பின்புமாக, பேசும் படமாக பார்க்கும் பொழுது "வில்லோடு வா நிலவே" அனுபவம் மற்றுமொருமுறை ஏற்படுகிறது.



மேலும், எந்தவிதத்திலும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத பேரரசன் தன் மதத்திற்கு முற்றிலும் மாறான வேறொரு மதத்திலிருந்து ஒரு இளவரசியை மனைவியாக ஏற்றுக்கொள்வது வேண்டுமானால் அரசியலாக இருக்கலாம். ஆனால், அவள் அரண்மனைக்குள்ளேயே கிருஷ்ணனுக்கு கோயில் கட்டிக்கொள்ள, வழிபட அனுமதிப்பது, அதற்கும் மேலாக அவள் காதலிக்கும் வரை காத்திருப்பது... சக மனித அன்பும் மரியாதையுமே ஆகும்.



உண்மையிலேயே ஜலாலுதின் இப்படி இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதில் எனக்கு அக்கறை இல்லை. மாறாக, அது முழுக்க முழுக்க கற்பனையாக இருந்தாலும், இன்றைய மதச்சகிப்பின்மை நிறைந்த வட இந்தியாவிற்கு இது சர்க்கரை தடவி பரிமாறப்படும் சமூக செய்தியாகவே என்னால் கருத முடிகிறது.



16-ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு, அதிலும் மனைவிக்கு சம உரிமை கொடுக்கும் ஒரு பேரரசனைப் பார்த்து விட்டு ஒரு வீட்டு ரகசியக் கண்ணீராவது கசிவது நிற்குமானல் அதுவே கோவாரிக்கரின் வெற்றி.



"ஜோதா அக்பர் எதையும் உணர்த்தவில்லை. என்னை எதையும் உணரச்செய்யவில்லை" என்று விமர்சித்த தோழிக்கு - இதுவும் ஒரு மாற்றுப்பார்வை, அவ்வளவே.



பயணம் செய்வதற்கென்றே
வேண்டும் சில பயணங்கள்,
போகும் இடம் பற்றிய கவலைகளின்றி ...




ஜோதா-அக்பரும், நச்செள்ளை-சேரலாதனும் அவற்றில் சில.




Tuesday, March 18, 2008

எல்லோரும் ஓ போடலாம்...

அதிர்ச்சியாகத்தான் இருந்தது, "ஓ பக்கங்கள்" விகடனில் நிறுத்தப்பட்ட பொழுது...



ஞானிக்கும் ஓய்வு தேவைப்பட்டிருக்கலாம் என்று எண்ணிய பொழுது குமுதத்தில் ஓ பக்கங்கள்.. நம்மைப் போல் ஞானியின் எழுத்துக்களை மதிப்பவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாகத்தான் இருந்தது, இது. அதன் முதல் அத்தியாயம் படிக்கும் வரை..


"வெகுமக்கள் கருத்துக்கு எதிராக என் கருத்து இருக்கிறதாம். அதனால் விகடனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு-வெளியே வந்துவிட்டேன்" என்ற அவரது பகிரங்க விளக்கம் தேவையற்றதாகவும் ஊடக நெறிகளுக்கு வெளியே இருப்பதாகவும் தோன்றுகிறது. குறிப்பாக, அதை விகடனின் நேரடி போட்டி வார இதழில் எழுதும்போது. அவர் குமுதத்திற்கு மாறியதோ, அங்கு ஓ பக்கங்களைத் தொடர்வதோ அவர் விருப்பம். ஆனால், விகடன் ஏதோ தவறு செய்தது போன்ற தொனியில் எழுதுவது அவரது நிலைப்பாட்டை நியாயப்படுத்த உதவவில்லை என்றே தோன்றுகிறது. ஞானியின் "கருத்துரிமை" விகடனுக்கு இல்லையா என்ன?

அடுத்ததாக, ஜெ - சசியின் திருக்கடையூர் சர்ச்சை பற்றிய அவரது பார்வை.. "தமிழ் மரபுப்படி" அவர்கள் "மாலை மாற்றியிருந்தால்" அது தவறாம்.. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் "மாலை போட்டுக்கொண்டார்களாம்". அது தவறில்லையாம். அவர்கள் மாலை மாற்றிகொள்ளட்டும், அல்லது போட்டுக்கொள்ளட்டும்- முரண் நமக்கு அந்த நிகழ்வோடு இல்லை. ( "மாலைப் போட்டுக்கொள்ளும்போது" ஏன் "கெட்டிமேளம்" கொட்டப்பட்டது என தமிழ்மரபின் படி ஞானி விளக்கினால் உதவீயாக இருக்கும்!) "தமிழ் மரபென்ற" ஒன்றை இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஞானி இதில் மட்டும் ஏன் அதை துணைக்கு அழைக்கிறார் என்பதில் தான்.

கண்ணகியைக் கடவுளாகப் பார்ப்பது கூட "தமிழ் மரபு" தான். அந்த கண்ணகியைத்தான் கரடி பொம்மை என்றார் ஞானி. பிற்போக்குத்தனத்தின் அடையாளமாக கண்ணகியை வர்ணித்தவரும் அவர்தான். அப்பொழுது எங்கே போயிற்று இந்த "தமிழ் மரபு"? (கண்ணகிக்கு வக்காலத்து வாங்குவதல்ல, இதன் நோக்கம்.) நீங்கள் ஒத்துகொள்ளாத ஒன்றை, நீங்கள் அங்கீகரிக்காத ஒன்றை ஏன் அளவீடாக முன்வைக்கிறீர்கள், ஞானி?

கடந்த 2001-இல் விண் நாயகன் இதழின் ஆசிரியராக அவர் இருந்த பொழுது ஒரு விளம்பர இணைப்பு திட்டத்துடன் அவரை நாங்கள் அணுகிய போது, எங்கள் கருத்தை எங்களைக் கொண்டே மறுக்க, மாற்றிக்கொள்ள வைத்தவர் ஞானி.

நான் வளர்ந்து விட்டேனா, இல்லை ஞானியின் கருத்தியல் தள(க)ர்ந்து விட்டதா?

Friday, March 14, 2008

இதனால் சகலமானவர்களுக்கும்...


வலைப்பூ..

பூ. இவ்வளவுதானா.. இந்த ஸ்ரீ, ப்ரியா, கார்த்திக் (மூவருக்கும் நன்றிகள்) இவங்களெல்லாம் வலைப்பூவா பூத்து தள்ரப்போ நாமளும் ஏன் "பூக்க" கூடாதுன்னு யோசிச்சதா...

இல்ல மத்தியானம் மூணு மணிக்கு தூக்கம் வராம என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்க ஆரம்பிச்சதா.. (அய்யய்யோ, உனக்கு தூக்கத்துல "எழுதுற" வியாதி இருக்கான்னு என் மனைவி கத்தறா)

மனசில இருக்கறத எழுதி அத படிச்சு சிரிக்கறப்போ மறை கழடரதுக்கு பதிலா இறுகிக்கும் - னு எங்கேயோ வறுகடலை போட்டு தந்த பேப்பர்ல போட்டிருந்தது நினைவுக்கு வந்து தொலைஞ்சதுனாலையா...

ஹூம், சுஜாதா இருந்தாலாவது படிச்சுட்டு பெரிய மனசு பண்ணி ஏதாவது ஒரு "கற்றதும் பெற்றதும்"ல ஒரு ஓரமா போட்டிருப்பாரு... (நெனப்பு தான்)

இப்படி, காரணம் இல்லாமல் அல்லது இன்னதென்று தெரியாமல் தான் சாலையோரம் பூத்து தொலைந்தது இந்த வலைப்பூ..

போகட்டும், சாலையில் பயணம் செய்பவர்களில், தப்பித்தவறி மகரந்தம் நாடி இதற்குள் வருவோர்க்கும் அவ்வப்பொழுது கிடைக்கலாம் சில தற்செயல் துகள்கள்...


இன்னும் இன்னும்...